திருமிகு பாபு விநாயகம் அவர்களுக்குத் தனித் தமிழும் தமிழிசையும் உயிர் மூச்சு. முழுவதும் ஆங்கிலவழிக் கல்வியே பயின்றிருந்தாலும் எட்டாம் வகுப்பில் தமிழ் இலக்கிய மன்றத் தலைவர் பொறுப்பு அளிக்கப் பெற்றிருந்தார். வாசிங்டன் தமிழ்ச்சங்கத்தின் மேனாள் இயக்குநர்.வாசிங்டன் தமிழ் சங்கத்தின் தென்றல் முல்லை இதழின் மேனாள் துணை ஆசிரியர். வெர்ஜினியாவில் உள்ள வள்ளுவன் தமிழ்ப் பள்ளியின் மேனாள் தமிழாசிரியர். உலகத் தமிழிசை மேம்பாட்டு மையத்தின் நிறுவனர் மற்றும் தலைவர்.2019 இல் உலகத் தமிழ் ஆராயச்சி நிறுவனம் மற்றும் உலகத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய முதல் உலகத் தமிழிசை மாநாட்டில் "உலகத் தமிழிசைத் தூதுவர்" விருது அளிக்கப் பெற்றுள்ளார். மேலும் தமிழிசை ஆய்வாளர், இசை ஆசிரியர், இசைக் கலைஞர், பாடகர் (பண்ணிசையில் அகில இந்திய வானொலியின் மேனாள் பாடகர்).
முனைவர் மார்கரெட் பாஸ்டின் அவர்கள் சென்னையிலுள்ள புனித வளனாரின் பிரான்சிஸ்கு சபைத் துறவியாவார். தமிழ் இசையியல் ஆய்வாளர். கொடைக்கானலிலுள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தின் இசைத்துறையில் நான்கு ஆண்டுகள் துறை தலைவராகப் பணியாற்றி பின்னர் திருச்சியிலுள்ள கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் 12 ஆண்டுகள் முதல்வராகப் பணியாற்றி ஓய்வுப் பெற்று தற்போது அவர்களது சபையால் சிங்கம்புணரியில் தொடங்கப்பட்ட மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் ஐந்தாவது ஆண்டாக முதல்வராகப் பணியாற்றி வருகிறார்.தென்னிந்திய இசையில் M.A, M.Phil. மற்றும் முனைவர் பட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகத்தில் பெற்றவர். தேசிய தர மதிப்பீட்டுக் குழு உறுப்பினர். ஆட்சிக் குழு உறுப்பினர், பேரவைக் குழு உறுப்பினர், பாடத்திட்டக் குழு தலைவர், முனைவர் பட்ட நெறியாளர், முனைவர்பட்ட வாய்மொழித் தேர்வாளர், செம்மொழி நிறுவனத்தின் சிறப்புக் குழு உறுப்பினர்.இசைத்துறை புத்தொளி பயிற்சி வகுப்பு ஒருங்கிணைப்பாளர் போன்ற பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். பத்து நூல்களைப் படைத்துள்ளார். வீரமாமுனிவரின் காப்பியமான தேம்பாவணியை பள்ளிப்பருவத்தினர் புரிந்துகொள்ளும் வகையில் எளிய உரைத் தந்துள்ளார். ஆபிரகாம் பண்டிதரின் 1000 பக்கமுள்ள மிகப்பெரிய இசைநூலான கருணாமிர்த சாகரத்தின் சுருக்கப்பதிப்பினை ஆக்கியளித்துள்ளார்.தேசிய அளவிலும் உலக அளவிலுமாக 73 கட்டுரைகளை அளித்துள்ளார். மேலும் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து 26 விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அமெரிக்காவிலுள்ள உலகத் தமிழிசைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத் தலைவராகவும் தலைமை பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
முனைவர் ஷைலா ஹெலின் அவர்கள் ஒரு தமிழ் இலக்கியவாதி, தமிழ் இசையியல் ஆய்வாளர். கோயம்புத்தூர் மற்றும் ஈரோட்டில் உள்ள பள்ளிகளில் இயற்பியல் ஆசிரியராகவும் கேரளப் பல்கலைக்கழகத்தின் திட்ட உதவியாளராகவும் பணியாற்றியவர். கேரளப் பல்கலைக்கழகத்தில் M.A(தமிழ்) Ph.D(தமிழ்) ஆகிய பட்டங்களை பெற்றுள்ளார். முனைவர் (Ph.D) மற்றும் முதுமுனைவர் ((PDF)) பட்டங்களில் தமிழிசை சார்ந்த ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார்.இதுவரை இவர் வெளியிட்டுள்ள மூன்று நூல்கள் தமிழிசை அறிஞர் நா.மம்மது (2015), பாடலாசிரியர். முனைவர். பா. புஷ்பா கிருஷ்ணன் (2016), ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தில் சிலம்பதிகாரத்தின் தாக்கம் (2021). தேசிய அளவிலும் உலக அளவிலுமாக 32 ஆய்வுக் கட்டுரைகளை அளித்துள்ளார். மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது (2015), ஆபிரகாம் பண்டிதர் விருது (2019), பெருமைக்குரியப் பெண்(2021), இசைத்தமிழ் அரசி விருது(2021), தமிழிசை மூர்த்தி முத்துத்தாண்டவர் விருது (2023) எனும் விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இவர் பாடல்கள் இயற்றியும் மெட்டமைத்துப் பாடியும் உள்ளார்.
அனுஷா பத்மநாபன் பயண சேவைகள், கல்வி நிர்வாகம் மற்றும் சமூக மேம்படு ஆகியவற்றில் விரிவான அனுபவமுள்ள பல்துறை நிபுணர்.
2019 முதல், அவர் கல்விப்பணியின் இயக்குநராகவும், அரசு உதவி பெறும் பள்ளியின் கௌரவ செயலாளராகவும் உள்ளார். மேலும் பல்வேறு அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து தன்னார்வத் தொண்டு செய்து வருகிறார்.
மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் மற்றும் இருபது ஆண்டுகளுக்கு மேலான நிறுவன மற்றும் நிர்வாக அனுபவத்துடன், செயல்பாட்டு மேலாண்மை, வாடிக்கையாளர் உறவுகள் மற்றும் நிறுவனத் தலைமைத்துவத்தில் நிபுணர்.
ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் சரளமாகத் தெரிந்த அவர், சமூக சேவையில் சிறந்து விளங்குகிறார்.